"தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்க்கும்" - சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை, கடந்த முறையைப் போலவே இந்த முறையும் திமுக உறுதியாக எதிர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தவெக அரசு இன்னும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாத நிலையில், அதை இப்போதே விமர்சிக்க முடியாது என்றும், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியும் என்பதால் அவர்கள் குதிரை பேரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், காவல் மரணங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். "அனைத்து ஆட்சிகளிலும் காவல் மரணங்கள் தொடர்கின்றன; இதற்கு ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்ல முடியாது, இது போலீஸாரின் கலாச்சார சீரழிவு. ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறை மனநிலையை மாற்ற டிஜிபி முதல் காவலர் வரை அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்" என்றார். மேலும், தவெக நிர்வாகிகள் மீதான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை வரவேற்ற அவர், மாணவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒரு சமூகப் பிரச்சினை என்றும், இதற்கு அரசைத் திட்டாமல் சமூகத்தையே மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

AthibAn Tv