“மேகேதாட்டு அணைக்கு ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்!”: தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துத் தமிழக காங்கிரஸ் அதிரடி தீர்மானம்!
சென்னை: "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்துப் போராடும்; தமிழகத்தின் அனுமதியின்றி அங்கு ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்" எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் நேற்று மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள 77 மாவட்டங்களில் 74 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், "தமிழக முதல்வர் விஜய், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைத்திருந்தால் அது மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடிந்திருக்கும். அதனைத் தவிர்த்து, மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு அவர் ஆட்சி அமைத்துள்ளதை வரவேற்கிறோம். புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு, மாவட்டத் தலைவர்களாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடு குறித்துப் பேசிய தலைவர்கள், "ஒருபுறம் கடந்த கால திமுக அரசு ஏற்படுத்திவிட்டுச் சென்ற கடுமையான கடன் சுமை மற்றும் நிர்வாகக் குளறுபடிகள், மறுபுறம் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசு என இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முதல்வர் விஜய் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். சவாலான சூழலிலும் சாதனைகளைப் படைத்து வரும் முதல்வர் விஜய்யின் இந்த வேகத்தைப் பார்க்கும்போது, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைப் போலத் தமிழக அரசியலில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனுடன், தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட கட்சியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தைப் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைத் தண்டிக்கும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட வேண்டிய அடுத்தகட்டப் போராட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


AthibAn Tv