“27 முக்கியக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்!”: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 கடைசி நாள் - அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!
சென்னை: தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நிர்வாகத் திட்டம் வகுக்கப்பட்ட 27 முக்கியத் திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை (Non-Hereditary Trustees) நியமனம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்குத் தகுதியும் ஆன்மீக ஈடுபாடும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத்துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள், அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள கோயில்களின் பட்டியல், தகுதிகள் மற்றும் அந்தந்தக் கோயில்களுக்கான நிர்வாகத் திட்ட விதிகள் உள்ளிட்ட முழு விவரங்களும் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பின்படி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயில், பெரியமேடு எல்லம்மன் கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விசுவநாத சுவாமி கோயில், ஓட்டேரி செல்லப்பிள்ளையாரயர் கோயில், வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில் மற்றும் கோவை மாவட்டம் இடுகம்பாளையம் அநுமந்தராய சுவாமி கோயில் உள்ளிட்ட 27 புகழ்பெற்ற கோயில்களுக்கு இந்த அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சம்பந்தப்பட்ட கோயிலுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாகத் திட்டச் சரத்துக்களை இணையதளத்தில் முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியாகப் (Online) பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது இணையதளத்தில் இருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்தும் அனுப்பலாம். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நேரியலாகவோ (In person) அல்லது விரைவு அஞ்சல் (Speed Post) மூலமாகவோ அந்தந்த மாவட்டச் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குச் சென்றடைய வேண்டும் என்றும், அதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.



AthibAn Tv