“அனைவரையும் ஒருங்கிணைத்து பழனிசாமி செயல்பட வேண்டும்!”: பதவிகளைத் துறந்த பின் எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ பரபரப்புப் பேட்டி!

Dina AthibAn
0

“அனைவரையும் ஒருங்கிணைத்து பழனிசாமி செயல்பட வேண்டும்!”: பதவிகளைத் துறந்த பின் எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ பரபரப்புப் பேட்டி!

கோவை: "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்; அதுவே தற்போதைய தேவை" என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 2) கோவை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், "கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள், அந்தந்த மாவட்டங்களில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே தங்களின் ரத்தத்தைச் சிந்தி பாடுபட்டவர்கள் மற்றும் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்காகக் களத்தில் நின்றவர்கள் என யாருக்கும் கட்சியில் தகுதியான பதவிகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே நான் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் எதுவும் வேண்டாம் என்று முடிவெடுத்தோம்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து தங்களின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பேசிய எஸ்.பி.வேலுமணி, "எங்களுக்குப் பதவிகள் தேவையில்லை, சாதாரணத் தொண்டர்களாகவே தொடர்கிறோம் என்று தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் அனைத்து விஷயங்களையும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் எக்காலத்திலும் அதிமுகவின் உண்மை உறுப்பினர்களாகவே நீடிப்போம். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற கட்சி மாற்றங்களின் போது தகுதியானவர்களுக்குப் பதவிகள் தரப்படும் என நாங்களும், தொண்டர்களும் பெரிதும் எதிர்பார்த்தோம்; ஆனால் அது நடக்கவில்லை. அதற்கான காரணத்தை நீங்கள்தான் தலைமையிடம் கேட்க வேண்டும்" என்று தலைமை மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்த கேள்விக்குத் பதிலளித்த அவர், "வழக்கமாக மகளிர் அணி கூட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி அக்கா எப்போதும் எங்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பார். ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்திற்கு எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. நாங்கள் அதற்கு முன்னரே தலைமைக்குத் தங்களின் அதிருப்திக் கடிதத்தைக் கொடுத்துவிட்டதால் எங்களை அழைக்காமல் தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை இன்னும் இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்டும்; அதற்குப் பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!