“தவெக எம்.எல்.ஏ-விடம் ரூ.35 கோடி பேரம்!”: செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியைப் பிடிக்கக் கரூரில் தனிப்படை போலீஸார் தீவிர வேட்டை!
கரூர்: தமிழகத்தில் ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டி, அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு முக்கியத் தொடர்பு இருப்பது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள சென்னை திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸார், கரூரில் முகாமிட்டுத் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, தோழமைக் கட்சிகள் மற்றும் அதிமுகவிலிருந்து வந்த 25 உறுப்பினர்களின் ஆதரவோடு 144 பலத்துடன் ஆட்சியைப் பிடித்த நிலையில், இந்தச் சதிச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ-வான டாக்டர் என்.இளையராஜாவைச் சில நபர்கள் அணுகி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட 35 கோடி ரூபாய் தருவதாகப் பேரம் பேசியுள்ளனர். ஒரு பிரதான கட்சியின் பின்னணியில் இச்செயலில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டதால் உஷாரான எம்.எல்.ஏ இளையராஜா, உடனடியாகக் கட்சி மேலிடத்திற்குத் தகவல் கொடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜிடம் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தார். ஆணையரின் உத்தரவின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் 'ஐபிடிஎஸ்' நிறுவன உரிமையாளர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிரப் புலன் விசாரணையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சென்னையில் நரேஷைச் சந்தித்துப் பேசியதும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் நேரடி அறிவுரையின் பேரிலேயே எம்.எல்.ஏ இளையராஜாவைத் திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு கோடி கணக்கில் பேரம் பேசினார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அசோக்குமார் தனது செல்போனை சுவிட்ச்-ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களான சக்திமெஸ் கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் கரூரில் பிடிபட்ட நிலையில், பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கரூரில் உள்ள திமுக ஆதரவாளர்கள் தனிச் சதித் திட்டம் தீட்டியதும், இளையராஜாவைப் போல வேறு சில தவெக எம்.எல்.ஏ-க்களிடமும் பேரம் பேச முயன்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த மாபெரும் பண பேரத்தின் பின்னணியில் உள்ள மூளைகளாகச் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்களே செயல்பட்டுள்ளதால், போலீஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று கரூரில் உள்ள அனைத்துத் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்திய தனிப்படையினர், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் வீடுகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கார்த்திக், ரமேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், செல்வன், குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த அரசியல் கவிழ்ப்புச் சதி வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv