“அதிமுகவை சனி பிடித்துள்ளது, எடப்பாடியின் முடிவு தவறு!”: சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர் - முழு விவரம்!
மாமல்லபுரம்: தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் எஸ்.வளர்மதி ஆகிய 4 முக்கியத் தலைவர்கள் தங்களது பதவிகளைத் துறந்து, சுமார் 10,000 ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழாவில், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த், அவர்களுக்குக் கட்சியின் துண்டை அணிவித்துத் தலைவர்களை வரவேற்றார். இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மான்ராஜ், எம்.ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தன், சுந்தர்ராஜன், ராமச்சந்திரன், பி.கே.வைரமுத்து, தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் திரளாகத் தவெகவில் இணைந்தனர்.
இணைப்பு விழாவில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "தேர்தலுக்கு முன்பாகவே தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம்; ஆனால் தலைமை கேட்கவில்லை. மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அதிமுக தலைமை, கட்சியின் கொள்கைக்கே முரணாக நாம் 'தீயசக்தி' என்று அழைக்கும் திமுகவுடன் ரகசியக் கூட்டு வைத்து ஆட்சி அமைக்க முயன்றது. அதில் எங்களுக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை. தமிழக மக்களின் கனவுக்கு இப்போதுதான் தவெக மூலம் தெளிவான பாதை கிடைத்துள்ளது. இனி தவெக வேறு, தமிழகம் வேறு அல்ல" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஆனால் பழனிசாமியின் தவறான முடிவுகளால் இன்று அந்த இயக்கம் தள்ளாடி வருகிறது" என்று சாடினார்.
அதிமுகவிலிருந்து விலகி இணைந்த நிர்வாகிகளை வரவேற்றுப் பேசிய தவெக அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "அதிமுகவில் தற்போது துரோகம் மட்டுமே எஞ்சியிருக்கிறது, ஆனால் தவெகவில் துரோகம் இல்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், இதயதெய்வம் ஜெயலலிதாவும் நடத்தியதுதான் உண்மையான மக்கள் இயக்கம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது நடத்துவது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். சுருக்கமாகச் சொன்னால், அதிமுகவை தற்போது 'சனி' பிடித்து ஆட்டுகிறது; தவெகவிலோ நல்வழிகாட்டும் 'குரு' இருக்கிறார்" என்று காரசாரமாகப் பேசினார்.
விழாவின் நிறைவாகப் பேசிய தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தற்போதைய அரசியல் சதி குறித்து எச்சரித்தனர். "அதிமுகவிலிருந்து வந்த உங்களுக்குத் தவெகவில் தகுந்த மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் அனைத்து இடங்களிலும் வென்றாக வேண்டும். தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கச் சூழ்ச்சி செய்து வருகிறார். இந்த ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிராகத் திரும்பும்" என்று எச்சரித்தனர். மேலும், முதல்வர் விஜய் அவர்கள் வரும் ஜூலை 10-ம் தேதி கரூர் மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பல மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் முறைப்படி அறிவித்தார்.


AthibAn Tv