“திமுக, அதிமுக, பாஜக இணைந்து புதிய கூட்டணி ஆட்சிக்குச் சதி” - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!

Dina AthibAn
0

“திமுக, அதிமுக, பாஜக இணைந்து புதிய கூட்டணி ஆட்சிக்குச் சதி” - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!

சென்னை:

“தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றச் சதி செய்கின்றன” என்று தமிழகச் சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இன்னும் ஒரு வருட காலத்திற்குள் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களது சொந்தக் கட்சிகளை நடத்த முடியாமல் முழுமையாகப் பாஜகவுடன் இணைத்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும்; தங்களது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் ‘கேபினட்’ அமைச்சர் பதவிகளை வாங்குவதற்காகவே தற்போதைய இறுதி முயற்சியில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கடுமையாகச் சாடினார்.

பேரக் குற்றச்சாட்டும் பத்திரப்பதிவுத் துறை சீர்திருத்தமும்:

தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் வளைக்கப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “கடந்த 50 நாட்களாகத் தவெக எம்.எல்.ஏ-க்களை ரூ.30 கோடி முதல் ரூ.50 கோடி வரை பேரம் பேசி இழுக்கத் திட்டமிட்டுச் சதி செய்கின்றனர்” என்று பகிரங்கப்படுத்தினார். மேலும், முந்தைய திமுக ஆட்சிக்கால ஊழல் முறைகேடுகளை விமர்சித்த அவர், “கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்’ என்ற பெயரில் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆட்களைப் போட்டுத் தனி வசூலில் ஈடுபட்டார். தற்போது தவெக அரசு பொறுப்பேற்ற பின் அவை அனைத்தும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, ஆன்லைன் வழியிலான வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. இனி பத்திரப்பதிவுத் துறையில் எவரேனும் லஞ்சம் அல்லது ஊழலில் ஈடுபட்டால் அவர்கள் தப்ப முடியாது, பாரபட்சமின்றி சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என எச்சரித்தார்.

நாகர்கோவில் விவகாரம் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு:

நாகர்கோவிலில் நிகழ்ந்த சிறைக் கைதி மரணம் மற்றும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கை குறித்து விளக்கிய அமைச்சர், “நாகர்கோவில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன; இதில் யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் குடும்பத்தினரை அரசு சார்பில் அமைச்சர்கள் விரைவில் நேரில் சந்திக்க உள்ளனர். தவெக ஆட்சியில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்குத் தமிழக அரசு ஒருபோதும் 100% அனுமதிக்காது. இவ்விவகாரத்தில் உரிய சட்டப் போராட்டம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!