சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு விவகாரம்: சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Dina AthibAn
0

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு விவகாரம்: சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:

அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவிகளை ராஜினாமா செய்ததை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு, தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவ்விருவரும், அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது சபாநாயகர் உத்தரவு தவறானது:

இதனிடையே, சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், "அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீதான கட்சித் தாவல் தொடர்பான தகுதி நீக்க நடவடிக்கை (Disqualification) சபாநாயகரின் பரிசீலனையில் நிலுவையில் இருந்தபோது, அதற்கு முன்னதாகவே அவர்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் அவசரமாக ஏற்றுக்கொண்டது முற்றிலும் தவறானது. சபாநாயகர் இந்த விவகாரத்தில் தனது மனதைச் செலுத்தாமல் இயந்திரத்தனமாக முடிவெடுத்துள்ளார். அவரது இந்த முடிவு இந்திய அரசியல் சாசனம் மற்றும் இயற்கை நீதி விதிகளுக்கு முற்றிலும் எதிரானது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை கோரிக்கையும் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக முடிவும்:

மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரியுள்ள மனுதாரர் தரப்பு, இவ்வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்துச் சட்டமன்றச் செயலாளர், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டது. மேலும், ஏற்கனவே இதேபோல நான்கு எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!