“அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திராணியற்று நிற்கிறதா தவெக அரசு?” - சீமான் கடுமையான கண்டனம்!

Dina AthibAn
0

“அம்பேத்கர் சிலை விவகாரத்தில் திராணியற்று நிற்கிறதா தவெக அரசு?” - சீமான் கடுமையான கண்டனம்!

சேலம்:

“சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் தவெக அரசு உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, அவரது சிலையைத் திறக்க ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிப்பது அறிவிலித்தனத்தின் உச்சம் என்று சாடியுள்ளார். சாதியின் பெயரால் பிளவுபட்டு நிற்பது தமிழ்ப் பேரினத்தின் பேரவலம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இச்சிக்கலைத் தீர்க்காமல் தவெக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அம்பேத்கரின் வரலாற்றுப் பங்களிப்பும் சாதியப் புரிதலின்மையும்:

அம்பேத்கர் ஒட்டுமொத்தச் சமூகத்திற்குமான பொதுக்குறியீடு என்று விவரித்துள்ள சீமான், அவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமாகப் போராடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். இடைநிலைச் சமூகங்களுக்கான 'இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவு' (OBC) வகைப்பாட்டை உருவாக்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது, தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைச் சட்டம் மற்றும் பெண்களுக்கு மகப்பேறுகால ஊதியத்துடன் கூடிய விடுமுறைச் சட்டங்களை இயற்றியது எனப் பலதரப்பட்ட மக்களின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பெருந்தகை அம்பேத்கர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஒரு தலைவரை, அவர் யாருக்காகப் பாடுபட்டாரோ அந்த மக்களில் ஒரு பகுதியினரே தவறாகப் புரிந்துகொண்டு எதிர்ப்பது பெரும் வரலாற்றுத் துயரம் என்றும் சீமான் கவலை தெரிவித்துள்ளார்.

திமுக, தவெக அரசுகள் மீது பாய்ந்த விமர்சனம்:

கடந்த 2021-ஆம் ஆண்டு ஒதியத்தூரில் அமைக்கப்பட்ட இந்தச் சிலை ஐந்து ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ள சீமான், சமூக நீதி பேசும் முந்தைய திமுக அரசு வாக்கரசியலுக்காகச் சமரசம் செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து தற்போதைய தவெக அரசைச் சாடிய அவர், "அம்பேத்கரைக் கொள்கைத் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இந்தச் சிலையைத் திறக்கவோ அல்லது சமூகப் பதற்றத்தைத் தணிக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிக்கலை வளர்ப்பது கண்டனத்திற்குரியது. இச்சிறிய பிரச்சினையைக் கூடத் தீர்க்க இயலாமல் தவெக அரசு திராணியற்றுப் போய்விட்டதா? இதுதான் உங்கள் கொள்கைத் தலைவர் மீது வைத்துள்ள பற்றா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கு தேவையற்ற மோதல்கள் ஏற்படுவதைத் தடுத்து சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!