தமிழகத்தில் முதன்முறை: மதுரையில் வன விலங்குகளுக்கான சிறப்பு மேம்பாலத்துடன் கூடிய வெளிவட்ட சாலை திறப்பு!
மதுரை:
மதுரை மாநகருக்குள் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, தமிழகத்திலேயே முதன்முறையாக வனவிலங்குகள் பாதுகாப்பாகக் கடந்து செல்லக்கூடிய பிரத்யேக ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலத்துடன் கூடிய வாடிப்பட்டி - தாமரைப்பட்டி வெளிவட்டச் சாலை நேற்று (ஜூலை 15) முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பில் ரூ.1,024 கோடி மதிப்பீட்டில், மதுரை - திண்டுக்கல் மற்றும் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் (தேசிய நெடுஞ்சாலை எண் 744ஏ) 29.960 கி.மீ. தொலைவுக்கு இந்த அதிநவீன நான்கு வழி வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சாலையினால் பயண நேரமும், எரிபொருள் செலவும் பெருமளவில் குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிநவீன உள்கட்டமைப்பும் 24 மணி நேரக் கண்காணிப்பும்:
இந்த வாடிப்பட்டி - தாமரைப்பட்டி வெளிவட்டச் சாலையில் சீரான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காகப் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பிரதான மேம்பாலங்கள், 2 வாகன மேம்பாலங்கள், 11 சுரங்கப்பாதைகள் (வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்காக), 4 பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள் மற்றும் ஒரு 'பகுதி கிளவர்லீஃப்' (Partial Cloverleaf) சந்திப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காக 11.32 கி.மீ நீளத்திற்கு அணுகுசாலைகளும் (Service Roads), அலங்காநல்லூர், நத்தம், அழகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகளும் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பைக் பலப்படுத்தும் நோக்கில், ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று வீதம் 30-க்கும் மேற்பட்ட அதிதுல்லிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சாலைப் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முதல் ‘அனிமல் பாஸ் ஓவர்’ மேம்பாலம்:
இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி மற்றும் பூச்சம்பட்டி இடையே அமைந்துள்ள வகுத்துமலை, வண்ணாத்திகரடு வனப்பகுதிகளுக்கு நடுவில் இச்சாலை கடந்து செல்கிறது. காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில், அவை சாலையைக் கடக்கும்போது விபத்துகளில் சிக்குவதைத் தடுக்கத் தமிழக வனத்துறையின் ஒப்புதலுடன் மாநிலத்தின் முதல் ‘அனிமல் பாஸ் ஓவர்’ (Animal Pass Over) மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வனவிலங்குகள் அச்சமின்றிப் பாலத்தைக் கடக்கும் வகையில், வாகனங்களின் சத்தம் மற்றும் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தைத் தடுக்கும் ஒலி-ஒளி தடுப்பு வேலிகள் (Sound and Light Barriers) அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விலங்குகள் பாலத்தின் கீழ் உள்ள பிரதான சாலைக்கு வராதவாறு கான்கிரீட் சுவர்கள் மற்றும் கம்பி வேலிகள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

AthibAn Tv