Type Here to Get Search Results !

“மனிதநேயம் காத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்!”: மயக்கமடைந்த பெண்ணைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு


“மனிதநேயம் காத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்!”: மயக்கமடைந்த பெண்ணைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை: அரசுப் பேருந்தில் பயணித்தபோது திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த பெண் பயணியை, சாமர்த்தியமாகச் செயல்பட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவான்மியூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் (வழித்தட எண்: 91) நேற்றுமுன்தினம் மாலை பெருங்குடி பகுதியில் பெண் பயணி ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ஓட்டுநரிடமும், நடத்துநரிடமும் விபரத்தைக் கூறியுள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், அடுத்த நிறுத்தம் குறித்து யோசிக்காமல் மாற்றுப் பாதையில் பேருந்தை நேரடியாக தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் செலுத்தினார். அப்போது பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தபோதிலும், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் ஓட்டுநரின் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். மருத்துவமனையை அடைந்ததும், சக பயணிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னரே பேருந்து மீண்டும் அதன் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

மனிதாபிமானத்துடன் செயல்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானதுடன், பொதுமக்கள் தரப்பிலும் அத்துறை ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில், கடமையை விட மனிதநேயத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் நடத்துநர் கீதர் இளையராஜா ஆகியோரைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் அழைத்து, அவர்களின் நற்செயலைப் பாராட்டி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.