“கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரும் எண்ணம் திமுகவுக்கு இல்லை!”: தவெக-வை சாடி முன்னாள் அமைச்சர் ரகுபதி அதிரடி விளக்கம்
புதுக்கோட்டை: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியில், திமுக மீதான குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ரகுபதி பலத்த மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுகவோடு இணைந்து கூட்டணி அமைக்கும் எண்ணம் ஒரு சிறு துளி கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கிடையாது. நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந்தால், எங்கள் கூட்டணிக் கட்சிகளை எங்களை ஆதரிக்குமாறு சொல்லியிருக்க மாட்டோம். ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மக்களைச் சந்தித்துத் தேர்தலில்தான் நாங்கள் வெற்றி பெறுவோமே தவிர, கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும் எண்ணம் திமுகவுக்குத் துளியும் கிடையாது. நிச்சயமாக நாங்கள் தற்போதைய ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு மற்றும் அதன் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ரகுபதி, உண்மையான குதிரை பேரம் தவெக தரப்பில்தான் நடப்பதாகக் குற்றம் சாட்டினார். "இரண்டு மதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொன்னால், அவர்களை நான் வெற்றி பெறச் செய்கிறேன் என்று விஜய் கூறியதாக வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அங்குதான் குதிரை பேரமும் யானை பேரமும் நடக்கிறது. 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது இதற்குச் சான்றாகும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 108-லிருந்து 120 ஆக உயர்த்த வேண்டும் என்ற இலக்கோடு அவர்கள் குதிரை பேர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். மேலும், நிர்மல் குமார் சொல்வது அத்தனையும் பொய் என்றும், திமுக ஐந்தாண்டுகளில் செய்த திட்டங்களில் பாதியைக் கூட தவெக அரசால் செய்ய முடியாது என்றும் சாடினார்.
தற்போதைய சட்டப்பேரவைச் செயல்பாடுகளைத் திரைத்துறையோடு ஒப்பிட்டுப் பேசிய ரகுபதி, "இன்றும் தமிழ்நாட்டில் ஷூட்டிங் தான் நடக்கிறது; சட்டமன்றம் ஒரு படப்பிடிப்பு நிலையம் போல மாறியுள்ளது. அங்கு முதல்வர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார், நாங்கள் எதிர்க்கட்சியாக நடிக்கிறோம். அனைவரையும் நடிகர்களாக மாற்றிய பெருமைதான் தவெக ஆட்சிக்கு உண்டு. அங்கு சபாநாயகர் இயக்குநராகச் செயல்படுகிறார். ஹீரோயினோ சட்டப்பேரவைக்கே வராதவராக இருக்கிறார், அவரைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். அதே வேளையில், வைகோவுக்குக் காட்டுக் கத்து மட்டும்தான் கத்தத் தெரியும் என்றும், திமுக பெயரைச் சொல்லி யாராவது லஞ்சம் வாங்கியிருந்தால் அதற்குத் தங்கள் கட்சி பொறுப்பல்ல என்றும் அவர் தனிப்பட்ட முறையில் சாடினார்.


AthibAn Tv