சீஷெல்ஸ் அதிபருக்கு வெண்கல ஆமை; தலைவர்களுக்கு காஞ்சி பட்டு, தோடர் சால்வை - பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பரிசு!
விக்டோரியா: இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான சீஷெல்ஸின் 50-ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜூன் 29 அன்று நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சீஷெல்ஸ் நாட்டின் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி உள்ளிட்ட அந்நாட்டுப் பிரமுகர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் பாரம்பரியமிக்கக் கலைப் பொருட்களை அவர்களுக்குப் பரிசாக வழங்கித் தனது நட்பை வெளிப்படுத்தினார்.
ஆமைகளின் புகலிடத்திற்கு வெண்கல ஆமைப் பரிசு
சீஷெல்ஸ் நாடு உலகின் மாபெரும் ஆமைகளின் புகலிடமாக விளங்குவதை நினைவுபடுத்தும் வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரின் கைவினைஞர்களால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வெண்கல ஆமையை அதிபர் பாட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். தொடர்ந்து அதிபரின் மனைவி வெரோனிகியூவுக்கு மத்திய பிரதேசத்தின் புகழ்பெற்ற ‘மகேஸ்வரி பட்டு சால்வை’ மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய ‘பிட்ரிவேர் பெட்டி’ ஆகியவற்றைப் பரிசளித்தார்.
மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீஷெல்ஸ் துணை அதிபர் செபாஸ்டியன் பிள்ளைக்கு சிக்கிம் மாநிலத்தின் பெருமையான 'ஆர்சிட் ஓவியத்தையும்', அவரது மனைவி லீனா பிள்ளைக்குத் தமிழ்நாட்டின் பாரம்பரிய 'காஞ்சிபுரம் பட்டுப்புடவையையும்' வழங்கி அசத்தினார். அதேபோல், நீலகிரி பழங்குடியினரான தோடர்கள் கைகளால் நெய்த 'பூத்துக்குளி சால்வை' சீஷெல்ஸ் நாடாளுமன்ற சபாநாயகர் அசாரெல் எர்னெஸ்டாவுக்குப் பிரதமரால் பரிசாக வழங்கப்பட்டது.
இருநாடுகளின் நெருங்கிய உறவும் தமிழர்களின் பங்களிப்பும்
இந்தியாவிற்கும் சீஷெல்ஸ் நாட்டிற்கும் இடையே மிக நீண்டகால, ஆழமான நட்பு நீடித்து வருகிறது. அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு விசா இன்றி தடையற்ற பயண அனுமதி வழங்கி வரும் சீஷெல்ஸ் நாட்டுக்கு, அதன் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 6 அதிநவீன ரேடார்களை இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளது. வர்த்தகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகச் சீஷெல்ஸ் தொடர்ந்து விளங்கி வருகிறது என்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

AthibAn Tv