சென்னை அருகே கடத்தப்பட்ட ரூ.8,000 கோடி நிதி நிறுவன மோசடி அதிபர்: தென்காசி பண்ணை வீட்டில் அதிரடி மீட்பு!
சென்னை: சென்னையை அடுத்த ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் கடத்தப்பட்ட பிரபல 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரரான சார்லஸ் (56) என்பவரைத் தனிப்படை போலீஸார் தென்காசியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து அதிரடியாக மீட்டனர். இதுதொடர்பாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓ.எம்.ஆர் சாலையில் மர்மக் கடத்தல்
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் செயல்பட்ட 'நியோ மேக்ஸ்' (Neo Max) நிறுவனம், பொதுமக்களின் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து 3 மடங்கு லாபம் தருவதாகக் கூறி, மாநிலம் முழுவதும் சுமார் 60,000 பேரிடம் ரூ.8,000 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார்கள் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய அந்நிறுவனத்தின் முன்னாள் பங்குதாரரான சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ், கடந்த 27-ஆம் தேதி தனது கார் ஓட்டுநர் ஷியாம் விக்னேஷ் உடன் நாவலூர் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு காரை நிறுத்திவிட்டு, ஓட்டுநரை அருகில் உள்ள வணிக வளாகத்திற்குப் பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு சார்லஸ் காத்திருந்தார். 15 நிமிடங்கள் கழித்து ஓட்டுநர் திரும்பி வந்தபோது, சார்லஸையும் அவரது காரையும் காணவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சிசிடிவி ஆய்வு மற்றும் தனிப்படை போலீஸாரின் வேட்டை
ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மற்றொரு காரில் வந்த நால்வர் சார்லஸை அவரது காருடனேயே கடத்திச் சென்றது பதிவாகியிருந்தது. கடத்தல் கும்பல் இரண்டு கார்களில் பிரிந்து, ஒரு கார் தென்காசி நோக்கியும், மற்றொரு கார் கோவை நோக்கியும் பயணித்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீஸார், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சார்லஸை பத்திரமாக மீட்டனர். அங்கிருந்த தினேஷ் பாண்டின் (34) என்பவரை உடனடியாகக் கைது செய்தனர்.
ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: 4 பேர் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட தினேஷ் பாண்டின் கொடுத்த தகவலின் அடிப்படையில், கோவையில் பதுங்கியிருந்த கருத்தபாண்டி (24), ராமநாதபுரத்திற்குத் தப்பி ஓடிய தினேஷ்குமார் (33) மற்றும் வேல் சபரி (26) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், இந்தக் கடத்தல் கும்பல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே சார்லஸை மிரட்டி ரூ.1.40 கோடியைப் பறித்துள்ளது தெரியவந்தது. அதுகுறித்து சார்லஸ் போலீசில் புகார் அளிக்காத தைரியத்தில், தற்போது அவரிடம் மேலும் ரூ.2 கோடி கேட்டு மிரட்டிக் கடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் சார்லஸின் சொகுசு கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

AthibAn Tv