டாஸ்மாக் பார்களின் டெண்டர் காலம் நிறைவு: ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க அரசு பரிசீலனை!
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களின் (Bars) ஒப்பந்தக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை வகுப்பதற்காகத் தற்போதைய ஒப்பந்தத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பார்களை நவீனமயமாக்கும் நோக்கில் இந்த தற்காலிக கால நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் காரணமாக வழங்கப்பட்ட கால நீட்டிப்பு
தமிழகத்தில் சுமார் 2,000 டாஸ்மாக் கடைகள் பார் வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்களை நடத்துவதற்கான உரிமம் டெண்டர் முறையில் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியாக விடப்பட்ட டெண்டரின் ஒப்பந்தக் காலம், கடந்த 2024 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. எனினும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய காரணத்தால், புதிய டெண்டர் நடைமுறைகளைத் தள்ளிவைத்து, பழைய ஒப்பந்தத்தையே மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த நீட்டிப்புக் காலமும் ஜூன் 30-ஆம் தேதியுடன் (நேற்று) நிறைவுக்கு வந்தது.
பார்களை நவீனமயமாக்கப் புதிய விதிகள்: அதிகாரிகள் விளக்கம்
தற்போதைய சூழல் குறித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கூறுகையில், "தேர்தல் காரணமாக ஏற்கனவே 6 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நேற்றுடன் அந்த அவகாசம் முடிவடைந்தாலும், உடனடியாகப் புதிய டெண்டர் விடப்படாது. ஏனெனில், டாஸ்மாக் பார்களின் உள்கட்டமைப்பு மற்றும் விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். பார்களை நவீனமயமாக்குவது, அவை அமைந்திருக்கும் இடங்களின் வசதிகளை மேம்படுத்துவது, அங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அதைக் கண்காணிக்கும் காரணிகளை மாற்றி அமைப்பது குறித்துப் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய வழிகாட்டுதல்களை இறுதி செய்யக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், தற்போதைய ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தனர்.


AthibAn Tv