மதிமுகவா, திமுகவா? செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பிய சீர்காழி எம்எல்ஏ செந்தில்செல்வன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில், மதிமுக சார்பில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்எல்ஏ செந்தில்செல்வன். சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் அண்மையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் கூட்டத்திலும் இவர் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பதையும், தொலைபேசியில் பேசுவதையும் தவிர்த்து வந்த செந்தில்செல்வன், மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற வேளாண்மைத் துறை கருத்தரங்கில் பங்கேற்க வந்தார். அப்போது மதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த அவரிடம், "நீங்கள் மதிமுகவில் தொடர்கிறீர்களா அல்லது திமுகவில் இணைந்துவிட்டீர்களா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாகப் பதிலளிக்காத அவர், "நான் எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணி செய்து வருகிறேன், மக்களுக்குத் தொடர்ந்து கடமையாற்றுவேன்" என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


AthibAn Tv