முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும் அவதூறாகவும் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 20-ம் தேதி ஆத்தூர் பகுதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய பேச்சு தொடர்பாக, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸார் இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் இது அவதூறு வழக்கே தவிர போலீஸார் வழக்குப் பதிவு செய்ய முடியாது என வாதிடப்பட்டது. எனினும், காவல் துறை மற்றும் புகார்தாரர் தரப்பில், ஏழு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மனுதாரர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும் என்றும், இந்த வழக்குப் பதிவு செய்யப்படாவிட்டால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறி முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தை 1967-க்குப் பின் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்துள்ளார்கள் என்றும், அவர்களை நாம்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவர் முதல்வர் பதவிக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார்.


AthibAn Tv