Type Here to Get Search Results !

"குமரி அணுக்கனிம சுரங்கத் திட்ட அரசாணையைத் திரும்பப் பெறுக": தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


"குமரி அணுக்கனிம சுரங்கத் திட்ட அரசாணையைத் திரும்பப் பெறுக": தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கன்யாகுமரி மாவட்டத்தில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு, அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல என்றும், கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த கார்ப்பரேட் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் அரசியல் முடிவு என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நில ஒதுக்கீடு நீட்டிப்பின் மூலம் கன்னியாகுமரியின் கடலோரச் சூழல், நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும் என மு.வீரபாண்டியன் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது அதற்கு நேர்மாறான பாதையில் செல்வது சரியல்ல என்றும், மாநில அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகளை ஏற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களைப் பலவீனப்படுத்தி, பொதுமக்கள் கருத்துக் கேட்பைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளைப் புறக்கணித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் கருத்துக் கேட்பைக் கட்டாயமாக்கி கடுமையான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில செயற்குழு சார்பில் தவெக அரசுக்கு உறுதியான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.