Type Here to Get Search Results !

“சைவ, வைணவ சமயங்கள் குறித்த சர்ச்சை பேச்சு!”: வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்


“சைவ, வைணவ சமயங்கள் குறித்த சர்ச்சை பேச்சு!”: வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், பெண்கள் குறித்து அவதூறாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொன்முடிக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்தப் புகார் மனு தற்போது எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தன் மீதான புகாரை விசாரணைக்கு ஏற்ற சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "இது ஒரு மூடிய அரங்கிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சி; மேலும் இந்த வழக்கை தொடர்வதற்கு முன்பாக அரசிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்பதால் வழக்கை தொடர்ந்து நடத்த சட்டப்படி இடமில்லை" என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்துப் புகார்தாரர் உமா ஆனந்தன் தரப்பில், "தனது பேச்சு ஊடகங்கள் வாயிலாகப் பரவி பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்புப் பேச்சை (Hate Speech) பேசியுள்ளார்; மேலும் அவருக்கு எதிராக வழக்குத் தொடர தற்போது அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்து இன்று இறுதித் தீர்ப்பளித்தார். இதன் மூலம் ஜார்ஜ் டவுன் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.