“காமராஜர், எம்.ஜி.ஆர் போல் அசைக்க முடியாத சக்தியாக விஜய் உருவெடுப்பார்!”: தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (02.07.2026) தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேஷ்குமார் முன்னிலையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுடன் கூட்டணி அமைத்து, 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் பங்கு பெற்றுள்ள புதிய சகாப்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்பட்ட போதும், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள அதிமுகவின் ஆதரவைப் பெறாமல் மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த முதல்வர் ஜோசப் விஜய்யின் கொள்கை உறுதிக்கு இக்கூட்டத்தில் நெஞ்சார்ந்த பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
கடந்த திமுக அரசு ஏற்படுத்திச் சென்றுள்ள பெரும் கடன் சுமை மற்றும் அரசு நிர்வாகக் குளறுபடிகள் ஒருபுறம், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு மறுபுறம் என இரட்டைத் தாக்குதல்களை எதிர்கொண்டு, முதல்வர் விஜய் இரண்டு மாதங்களில் 'தமிழ்நாட்டின் அதிசயம்' என்று சொல்லும் அளவுக்குப் பல சாதனைகளைப் படைத்துள்ளார் என காங்கிரஸ் தீர்மானத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்காக 200 யூனிட் இலவச மின்சாரம், சிறு-குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, எட்டாம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், பெண்களுக்குப் பாதுகாப்பாகச் 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை' மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் என அவர் எடுத்து வரும் அதிரடி முடிவுகள், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் போன்ற அசைக்க முடியாத சக்தியாக அவரைத் தமிழக அரசியலில் உருவெடுக்க வைக்கும் எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் மிக முக்கியத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றிற்கு முற்றிலும் எதிரானது என்றும், இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்திருந்ததை மாவட்டத் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழகத்தின் சட்டப்பூர்வமான நதிநீர் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில், கர்நாடக அரசு மேற்கொள்ளும் மேகேதாட்டு அணை கட்டுமான முயற்சிகளைத் தமிழக காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்றும், தேவைப்படின் அணைக்கு எதிராகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் இக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 'நாற்பதும் நமதே' என்கிற இலக்கோடு ராகுல் காந்திக்குத் தமிழகத்தில் இருந்து பேராதரவைத் திரட்டி வாக்குகளாக மாற்ற, மாவட்டத் தலைவர்கள் அனைவரும் தங்களின் முழு உழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர்.


AthibAn Tv