“விரைவில் திமுக - அதிமுக கூட்டணி!”: எடப்பாடி பழனிசாமியின் ரகசிய பேரத்தை உடைத்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
மாமல்லபுரம்: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக முக்கிய நிர்வாகிகளின் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) இணைப்பு விழாவில் பேசிய தவெக மூத்த தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விழாவில் பேசிய அவர், "திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே திரைமறைவில் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறார்கள். அது வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலாகவோ அல்லது மக்களவைத் தேர்தலாகவோ இருக்கலாம். தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் இணைந்து ஆட்சி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முதல் இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் உதயநிதியும் முதல்வராகும் வகையில் சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குச் செய்த மாபெரும் துரோகம் என்று சாடிய ஆதவ் அர்ஜுனா, ஒட்டுமொத்தக் கட்சியையும் திமுகவிதான் எடப்பாடி அடமானம் வைக்க முயல்வதாகக் குறிப்பிட்டார். "தேர்தலுக்குப் பிறகு தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்தபோது, 47 இடங்களில் வென்ற அதிமுகவிடம் நாங்கள் ஆதரவு கேட்காததற்குக் காரணம், அது ஒரு அரசியல் வியூகம் என்பதால் தான். ஆனால், தான் மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காகத் தீய சக்தியான திமுகவுடன் எடப்பாடி கைகோர்த்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தனிப்பட்ட முறையில் திமுகவில் இணைந்தபோது அவரைத் துரோகி என்ற எடப்பாடி பழனிசாமி, இப்போது ஒட்டுமொத்தக் கட்சியையுமே அடகு வைக்கத் துணிகிறார். தற்போதைய நிலையில் இரண்டு விஜயபாஸ்கர்களும் தவெகவில் இணைந்ததன் மூலம் 60 விழுக்காடு அதிமுக எங்களுடன் இணைந்துவிட்டது, விரைவில் அதிமுக வெறும் லெட்டர்பேட் கட்சியாக மாறும்" என்று அவர் எச்சரித்தார்.
மேலும், வாரிசு அரசியல் விமர்சனங்களை அதிமுக மீது திருப்பிய அவர், எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுனை இளைஞரணி தலைவராக்கத் திட்டமிட்டுள்ளதை மாவட்டச் செயலாளர்கள் உணர்ந்துவிட்டதாகக் கூறினார். திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேருவதற்கு முன்பாகவே, அதிமுகவினர் அனைவரும் தவெக பக்கம் வந்துவிடுவார்கள் என்றும், எடப்பாடியும் அவரது மகனும் மட்டுமே கட்சியில் எஞ்சியிருப்பார்கள் என்றும் எள்ளி நகையாடினார். தவெகவினர் 50 கோடி ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ-க்களை வாங்குவதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், தங்கள் அமைச்சர்கள் மீது ஸ்டாலினால் ஒரு ரூபாய் ஊழல் குற்றச்சாட்டைக் கூட நிரூபிக்க முடியாது என சவால் விடுத்தார்.
திமுக அரசின் செயல்பாடுகளையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாகச் சாடிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின் போது கரூரில் தவெகவுக்கு எதிராகக் காவல்துறையை வைத்து திமுக பல்வேறு அச்சுறுத்தல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். "கரூரில் தவெக தொண்டர்கள் சிந்திய கண்ணீரின் பாவத்தினால்தான் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியைத் தழுவினார். தவெக - அதிமுக தொண்டர்களின் இந்த மாபெரும் இணைப்புக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் லண்டனில் போய் செட்டில் ஆக வேண்டியதுதான்; அவரது குடும்பத்தில் அவரே கடைசி முதல்வராக இருப்பார் என்பதை எழுதி வைத்துக் கொள்ளட்டும்" என்று வன்மையாகச் சாடினார். மேலும், ரெட் ஜெயன்ட் போன்ற நிறுவனங்களின் கருப்புப் பண ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் 234 தொகுதிகளிலும் தவெகவே அமோக வெற்றி பெற்று நேர்மையான ஊழலற்ற ஆட்சியைத் தொடரும் என்றும் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.


AthibAn Tv