Type Here to Get Search Results !

“ஒரே கோரிக்கையுடன் மீண்டும் மீண்டும் மனு!”: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாகத் திறக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி


“ஒரே கோரிக்கையுடன் மீண்டும் மீண்டும் மனு!”: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாகத் திறக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை உடனடியாகத் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில், "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டே மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில், கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு 2026 ஜனவரியில் மருத்துவமனை ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது மனுவில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்காமல், நீதிமன்றத்தில் தவறான மற்றும் முரணான உறுதிமொழிகளை வழங்கி வரும் அரசு உயர் அதிகாரிகள் மீது உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விரிவான விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் இந்த அணுகுமுறைக்குக் கடும் அதிருப்தி தெரிவித்தது. "மனுதாரர் ஒரே கோரிக்கைக்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் போன்ற ஒரு பிரம்மாண்ட மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் நிர்வாகப் பணிகள் மற்றும் இதர உட்கட்டமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை என்பதை மனுதாரர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இதேபோன்று தொடர்ந்து மனு தாக்கல் செய்ததற்காக ஏற்கனவே இவருக்கு உயர் நீதிமன்றம் விதித்த 50,000 ரூபாய் அபராதத்தை, உச்ச நீதிமன்றம் 5,000 ரூபாயாகக் குறைத்திருந்ததையும் நினைவு கூர்ந்த நீதிபதிகள், இந்த மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.