Type Here to Get Search Results !

“சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர் அதிரடி கைது!”: பொறையாறு அருகே காதல் ஜோடி உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை


“சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர் அதிரடி கைது!”: பொறையாறு அருகே காதல் ஜோடி உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காதலர்கள் இருவர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை உட்பட 5 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சாத்தங்குடி புதுப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (19) என்ற வாலிபரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்குச் சிறுமியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தன்னைச் சிறுமியின் உறவினர்கள் மிரட்டித் தாக்கியதாகப் பார்த்திபன் இறப்பதற்கு முதல்நாள் பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், நேற்று முன்தினம் பார்த்திபன் மற்றும் அந்தச் சிறுமி ஆகிய இருவரும் சாத்தங்குடி பகுதியில் உள்ள ஒரு கீற்றுக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட சாதி ஆணவக் கொலை என்று கூறி பார்த்திபனின் உறவினர்கள் சிறுமியின் வீட்டைச் சூறையாடியதுடன், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பார்த்திபன் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் சூர்யா (28), மணிமாறன் (27), வசந்தன் (24), விஜயகுமார் (26) ஆகியோரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தனும் நேற்றிரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மறுபுறம், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி பார்த்திபனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அவரது உறவினர்கள் மறுத்து வந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் மாவட்ட எஸ்பி (பொறுப்பு) ஸ்டாலின் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தற்போதைக்கு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சாத்தியக்கூறுகள் இருந்தால் இது கொலை வழக்காக மாற்றப்படும் என்றும் எஸ்பி உறுதியளித்தார். மேலும், தங்களால் பரிந்துரைக்கப்படும் மருத்துவர்களைக் கொண்டு வீடியோ பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும் என்ற பார்த்திபன் தரப்பின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.