பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ‘டிஜிட்டல்’ வசதி: புகார்களைத் தீர்க்க ‘மக்கள் சேவை தளம்’ செயலியை அறிமுகம் செய்கிறார் முதல்வர் விஜய்!

Dina AthibAn
0

பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ‘டிஜிட்டல்’ வசதி: புகார்களைத் தீர்க்க ‘மக்கள் சேவை தளம்’ செயலியை அறிமுகம் செய்கிறார் முதல்வர் விஜய்!

சென்னை: தமிழக முதல்வர் விஜய் தனது சொந்தத் தொகுதியான சென்னை பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளையும், புகார்களையும் உடனுக்குடன் கேட்டு அறிந்து தீர்வு காணும் வகையில், ‘மக்கள் சேவை தளம்’ என்ற அதிநவீன பிரத்யேக செல்போன் செயலியை (Mobile App) விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி மக்கள் சேவை தளம்: பெரம்பூர் தொகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாட மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தொகுதி எம்.எல்.ஏ-வான முதல்வரின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லும் பாலமாக இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசின் நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவி, வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியிலான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்துப் புகார்களையும் பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.

பொதுமக்கள் இந்தச் செயலி மூலம் புகாரைப் பதிவு செய்த அடுத்த சில நொடிகளிலேயே, அது பெரம்பூரில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தை நேரடியாகச் சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதற்கான பிரத்யேக ‘டிக்கெட் எண்’ (Ticket Number) புகார்தாரரின் செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக (SMS) உடனடியாக அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் தங்களின் டிக்கெட் எண்ணைச் செயலியில் உள்ளீடு செய்து, தங்களது புகாரின் தற்போதைய நிலையை (Live Status) ஆரம்பம் முதல் தீர்வு வரை நேரடியாகக் கண்காணித்துக் கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு: ஒவ்வொரு புகாரும் அதன் முக்கியத்துவத்தின் முன்னுரிமை அடிப்படையிலும், தீர்க்கப்பட வேண்டிய காலக்கெடுவோடும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது அதிகபட்சமாக 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் துப்புரவு போன்ற அத்தியாவசிய பொதுப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அதுகுறித்த விரிவான பதில் மக்களுக்குச் செயலி வழியாகவே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென பெரம்பூர் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறை (Modern Control Room) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன செல்போன் செயலி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் விரைவில் நேரில் தொடங்கி வைக்கவுள்ளார். முதல்வரின் இந்த டிஜிட்டல் மக்கள் சேவைத் திட்டம் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் என்றும், பெரம்பூர் தொகுதி மக்களின் வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்து தமிழகத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்தச் செயலி விரிவுபடுத்தப்படும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!