அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி!
சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வரும் சூழலில், உண்மைகளைச் சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: "கரூர் சம்பவத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி. ஆனால், அந்தப் பொன்னான சம்பவத்தைப் பற்றி அவர் இன்றும் பொய்யும், புரட்டுமாகப் பேசி வருகிறார். கரூர் எம்.எல்.ஏ-வாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். தற்போது அவர் ஆளும் தவெக கட்சியில் இணைந்துவிட்டதால் அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. எனவே, தொகுதி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசி வருகிறார்."
அன்று துணை நின்றவர் ஸ்டாலின்: "கரூர் சம்பவத்தின்போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரிதமான நடவடிக்கையை ஒட்டுமொத்தத் தமிழகமுமே பாராட்டியது. தற்போதைய முதல்வர் விஜய்யைப் போல் அவர் முகத்தை மூடிக்கொண்டு ஓடிப்போய் ஒளிந்து கொள்ளவில்லை. அன்று மக்களோடு களத்தில் துணை நின்று, மக்களின் உயிர்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே மேற்கொண்டவர் மு.க.ஸ்டாலின் என்பதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள். கரூர் வழக்கை விசாரிப்பதற்கு திமுக ஆட்சியில் எஸ்.ஐ.டி (SIT) அமைத்து, அதன் தலைவராக யாரை நாங்கள் நியமனம் செய்தோமோ, அதே காவல்துறை அதிகாரியைத்தான் தற்போதைய அரசும் உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமித்துள்ளது. எனவே, கடந்த திமுக அரசு எவ்வளவு நடுநிலையாகத் துரித நடவடிக்கை எடுத்தது என்பதற்கு இதுவே சாட்சி" என்று சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மேலும் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதனைச் சீர்குலைக்கும் வகையிலேயே ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசியுள்ளார். எனவே, இதுகுறித்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். அதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் (Contempt of Court) தொடர உள்ளோம். இவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது கேரளாவில் 928 கோடி ரூபாய்க்குப் பிரம்மாண்ட லாட்டரி ஊழல் வழக்கு இன்னும் நடந்து வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்குக் கண்டனம்: தொடர்ந்து தவெக ஆட்சியில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறித்துப் பேசிய அவர், "திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது தற்போதைய தவெக அரசின் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். இதனை நிச்சயமாகச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொண்டு சந்திப்போம். இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதைத் தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைய ஆட்சியில் எவ்வித ஆக்கப்பூர்வமான பணிகளும் நடக்கவில்லை. தினமும் கொலைகள், கொள்ளைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் தடுத்துக் கவனிப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை" என்று ஆர்.எஸ்.பாரதி மிகக் காரசாரமாகத் தெரிவித்தார்.

AthibAn Tv