“பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்” - 1991 விமானக் கடத்தல் சம்பவத்தை விவரித்து சிங்கப்பூர் முன்னாள் தூதர் விளாசல்!

Dina AthibAn
0

“பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்” - 1991 விமானக் கடத்தல் சம்பவத்தை விவரித்து சிங்கப்பூர் முன்னாள் தூதர் விளாசல்!

சிங்கப்பூர்: "பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது முற்றிலும் நேரத்தை வீணடிக்கும் செயல்" என சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்தின் தவறான நிர்வாகமே அந்நாட்டின் தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், "பாகிஸ்தானுக்கு அதன் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானால்தான் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகிறது" என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதே மேடையில் இருந்த சிங்கப்பூர் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் பேசியதாவது:

"பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் அதன் இருப்பிடத்தை (Geography) ஒருபோதும் குறை கூற முடியாது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவத்தின் தவறான நிர்வாகமே அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். பாகிஸ்தான் தனக்கான பிரச்சினைகளைத் தானே தேடிக்கொள்கிறது. குறிப்பாக, பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்பதற்கு என் வாழ்நாளில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்."

1991 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல்: "கடந்த 1991-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் நடுவானில் கடத்தினர். அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரைிறக்கப்பட்டது. விமானத்திற்குள் ஆல்கஹாலை (மதுபானம்) ஊற்றிப் பற்றவைத்து விடுவோம் என்று கடத்தல்காரர்கள் மிரட்டினர். அப்போது நான் சிங்கப்பூர் வெளியுறவுத்துறையில் பணியாற்றியதால், கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது."

அதிகாலை 3 மணி போன் கால்: "நான் கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கை என்னவென்று கேட்டபோது, தாங்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோவிடம் பேச வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அப்போது பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்தார். பெனசிர் பூட்டோ இஸ்லாமாபாத்தில் இல்லாமல், சிந்து பகுதியில் உள்ள தனது எஸ்டேட்டிற்குச் சென்றிருந்தார். நான் பாகிஸ்தான் தூதர் மூலமாக அவரது ரகசிய போன் எண்ணைப் பெற்று, அதிகாலை 3 மணியளவில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன்."

"மறுமுனையில் போனை எடுத்த நபரிடம் விமானக் கடத்தல் நிலவரத்தைக் கூறி, அவசரமாகப் பெனசிர் பூட்டோவிடம் பேச வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அதற்குப் பதிலளித்த அந்த நபர், 'மேடம் தூங்கிக் கொண்டிருக்கிறார், அவரை இப்போது தொந்தரவு செய்ய முடியாது' என்று அலட்சியமாகத் தொடர்ந்து கூறினார். ஒரு விமானமே கடத்தப்பட்டுப் பயணிகள் உயிருக்குப் போராடும் சூழலில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து வந்த இந்த அலட்சிய பதிலை கேட்டு வெறுப்படைந்து நான் போன் இணைப்பைத் துண்டித்தேன்" என்று கவுசிகன் விவரித்தார்.

கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கை: பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் கமாண்டோ படையினர் அதிரடியாக விமானத்திற்குள் புகுந்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். "பாகிஸ்தான் தரப்பின் இந்த அலட்சியப் போக்கின் காரணமாக, அந்தத் தீவிரவாதிகள் எதற்காக விமானத்தைக் கடத்தினார்கள், அவர்களின் உண்மையான கோரிக்கை என்ன என்பது இன்றுவரை எங்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது" என்று பிலஹரி கவுசிகன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!