Type Here to Get Search Results !

ஆளுநருக்கு உரிமையும் கடமையும் உண்டு; அமைச்சர் நிர்மல்குமாருக்கு பாஜக நாராயணன் பதில்!


ஆளுநருக்கு உரிமையும் கடமையும் உண்டு; அமைச்சர் நிர்மல்குமாருக்கு பாஜக நாராயணன் பதில்!

மதுரைக்குச் சென்றிருந்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், வைகை ஆற்றின் பரிதாப நிலையைக் கண்டு அதிர்ந்து போய், அதை மீட்டெடுக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். "ஆறு இருக்கிறது, நீர் எங்கே?" என்று கேள்வி எழுப்பிய ஆளுநர், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் யாரும் முன்வராவிட்டால் ஆளுநர் அலுவலகமே களமிறங்கும் என்றும் பேசியிருந்தார். இதற்கு தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சரின் விமர்சனத்திற்குத் தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர் ஆளுநர். மக்களைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய உரிமையும், கடமையும் அவருக்கு உண்டு" என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது சொந்தத் தொகுதியான திருப்பரங்குன்றம் அமைந்துள்ள மதுரையில், வைகை ஆற்றின் பிரச்சினையைச் சுட்டிக்காட்டிய ஆளுநருக்கு எதிராக அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது அவரின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், முதிர்ச்சியின்மையையும் வெளிப்படுத்துவதாக நாராயணன் திருப்பதி சாடியுள்ளார். தங்களுக்கு எதிரான எந்தவொரு குரலையும் ஏற்றுக்கொள்ள முடியாத தவெக அரசின் பாதுகாப்பின்மையையே இது காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவால் மதுரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் தனது அதிகார ஆணவத்தை முன்னிறுத்தி ஆளுநரைக் கண்டிப்பது வருந்தத்தக்கது என்று பாஜாக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் வைகை மீட்டெடுப்புப் பணியில் உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பிரச்சினையைச் சுட்டிக்காட்டுபவர்களைத் தாக்குவது சரியான அரசியல் அல்ல என்றும் நாராயணன் திருப்பதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று பாஜாக வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் நிர்மல் குமாருக்கு முதல்வர் விஜய் தக்க அறிவுரை வழங்குவதோடு, அரசியலமைப்புச் சட்டத்தையும், ஆளுநரையும் மதித்து நடக்குமாறு பணிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் ஆணவ அரசியலை விடுத்து உண்மையான தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.