விஜய் ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டு நேர்மை நிலவுகிறது; புதுச்சேரியில் வைகோ பாராட்டு!
புதுச்சேரியில் நடைபெறும் தனித்தமிழ் இயக்க விழாவில் பங்கேற்பதற்காக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழகத்தில் இதுவரை தலைவிரித்தாடிய ஊழல் ஒழிக்கப்பட்டு, தற்போது நேர்மையான ஆட்சியை விஜய் நடத்துகிறார்; அவருடைய கொற்றம் (ஆட்சி) வாழ்க, இப்படியே இந்த ஆட்சி நீடிக்கும்" என்று தவெக அரசைப் பாராட்டிப் பேசினார். மேலும், முந்தைய திமுக அரசு பெருச்சாளி போல ஊழல் மட்டுமே செய்தது என்றும் அவர் விமர்சித்தார்.
கரூர் விவகாரத்தில் முன்பு விஜய்யை விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வைகோ, "அன்று அவர் அங்கு போகவில்லை என்பதால் அப்படிச் சொன்னேன்; இன்று அவர் போகிறார், அவருக்கு மனசாட்சி இருக்கிறது என்று இப்போது சொல்கிறேன்" எனத் தெரிவித்து தனது முந்தைய விமர்சனத்திற்கு விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய வைகோ, கட்சிகளுக்குள் நடக்கும் விமர்சனங்கள் குறித்துக் குறிப்பிடுகையில், "இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளிலும் நடப்பதுதான் இங்கும் நடக்கிறது. நேதாஜி காங்கிரஸை வளர்த்தார், ஆனால் அவர் பதவி பறிக்கப்பட்டதும் தனியாகக் கட்சி ஆரம்பித்து விமர்சித்தார். திலகர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரும் காங்கிரஸை வளர்த்துவிட்டு பின்னர் விமர்சித்துள்ளனர். இது அரசியலில் வழக்கமான ஒன்றுதான்" என்றார்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது குறித்து அக்கட்சியின் எம்பி துரை வைகோ 'நிம்மதியாக இருக்கிறது' என்று கூறியிருந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைகோ, "திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் லட்சக்கணக்கான மதிமுக தொண்டர்கள் எப்படி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களோ, அதே நிம்மதியைத்தான் திருச்சி எம்பி துரை வைகோவும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.


AthibAn Tv