சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த பெண் பலி; உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு!
சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (PESO) உரிமம் பெற்று இயங்கி வரும் 'ஸ்ரீ குருலட்சுமி' பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை மாலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் தாக்கத்தால் ஆலையில் இருந்த 2 உற்பத்தி அறைகள் முற்றிலும் தரைமட்டமானதோடு, மேலும் 10 அறைகள் பலத்த சேதமடைந்தன.
வெடிவிபத்து ஏற்பட்ட உடனேயே அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். இருப்பினும், சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த ராசம்மாள் (65) என்ற பெண் தொழிலாளி இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்குச் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராசம்மாள், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலையின் உரிமையாளரான கருப்பசாமி (சுப்பிரமணி மகன்) மற்றும் ஆலையின் போர்மேன் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


AthibAn Tv