மதுரையில் ஆளுநரின் ஆலோசனைக்கூட்டம் பெரும் சர்ச்சை; அமைச்சர் நிர்மல்குமார் கடும் எதிர்ப்பு!
மதுரைக்கு வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோரை வரவழைத்து சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தவெக அரசின் அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார், "எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர், அரசின் எந்தவொரு திட்டத்தையும் ஆய்வு செய்ய உரிமையில்லை; அதை தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது" என்று கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அமைச்சரின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, 'அப்படியென்றால் யார் சொல்லி அதிகாரிகள் ஆளுநரைச் சந்தித்தார்கள்?' என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, ஆளுநரின் இந்தச் செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போதும் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி இது போன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்தியபோது எழுந்த எதிர்ப்புகளால் அதை அவர் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து நேற்று இரவு விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ஆளுநரை ஆட்சியரும் காவல் துறை அதிகாரிகளும் 'மரியாதை நிமித்தமாகவே' சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், நேற்று காலையிலேயே விமான நிலையத்தில் ஆளுநரைச் சந்தித்துப் பூங்கொத்து கொடுத்த நிலையில், மீண்டும் எதற்காக விருந்தினர் மாளிகையில் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற கேள்விகள் வலுவாக எழுந்துள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, நேற்று காலை ஆளுநர் மதுரை வந்தபோதே அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தகவல் வெளியாகி சர்ச்சையானதால் ஆய்வுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு, பின்னர் அதிகாரிகள் மட்டும் தனியாகச் சென்று மதுரையின் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநருடன் பேசியதாகத் தெரியவந்துள்ளது.


AthibAn Tv