மோடி-ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 23 கட்சிகள் கடிதம்
"நாட்டில் மோடி-ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகம் மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்து, 140 கோடி மக்களின் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் மீட்டெடுக்க வேண்டும்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 'இண்டியா' கூட்டணி அனுப்பிய கூட்டுக் கடிதத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 8 அன்று நடைபெற்ற 'இண்டியா' கூட்டணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 23 அரசியல் கட்சிகள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் கையெழுத்துகளுடன் இந்த கூட்டுக் கடிதம் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டக் கட்டமைப்பை அழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களிடம் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நீதித்துறையின் கடமை என்றும், தேர்தல் நடைமுறைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


AthibAn Tv