“ஆணவம் அழிவுக்கு வழி” - திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். முன்னதாக, இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவரின் இந்தச் சட்ட நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுகவின் முக்கியத் தலைவர்களான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் தங்களது எக்ஸ் (X) தள பக்கத்தில் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையை ‘டேக் டைவர்ஷன்’ அரசு மற்றும் சினிமா பாணி போலீஸ் ராஜ்ஜியம் என விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது பெண் ஒருவர் கொடுத்துள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த ‘தூயசக்தி ஆட்சி’, அவதூறு வழக்கில் மட்டும் ஏன் இந்த அவசரத்தைக் காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கத் துப்பில்லாமல், குதிரை பேரம் மூலம் அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களை இணைப்பதும், விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து காலத்தைக் கடத்துவதும்தான் இந்த அரசின் சாதனையா எனக் குறிப்பிட்டுள்ள அவர், “ஆணவம் அழிவுக்கு வழி” என எச்சரித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழியும் இக்கைது நடவடிக்கைக்குத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான அனிதா ராதாகிருஷ்ணன், தனது சொந்தத் தொகுதியில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வுப் பணியில் இருந்தபோது, தவெக அரசின் காவல் துறை மிகவும் அராஜகமான முறையில் அவரைக் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது போன்ற அடக்குமுறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் திமுக போன்ற ஒரு பேரியக்கம் எப்போதும், எதற்கும் அடிபணியாது என்றும் அவர் தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அரசை 'சோஃபா மாடல்' மற்றும் 'ரீல்ஸ் அரசு' என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டுப் போயிருக்கும் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரைத் திட்டமிட்டுக் கைது செய்வதில் இந்த அரசு காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். அவதூறு பேசி, பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும்தான் ஆளுங்கட்சியின் அரசியல் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற பொய் வழக்குகளாலும், கைது நடவடிக்கைகளாலும் திமுகவை ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.


AthibAn Tv