Type Here to Get Search Results !

“தமிழக ஆளுநரின் தன்னிச்சையான செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது”: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்


“தமிழக ஆளுநரின் தன்னிச்சையான செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது”: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரைக்குச் சென்ற தமிழக ஆளுநர் அங்கு அரசு அதிகாரிகளுடன் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தியது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஆளுநருக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுதான் தீர்வு காண வேண்டுமே தவிர, தன்னிச்சையாகச் செயல்படுவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்திற்கு எதிரானது என்றும், அவரது இந்த அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல என்றும் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், விதிகளை மீறி இயங்கும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை உடனே அகற்ற வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவரை 20 கி.மீ சுற்றளவில் உள்ள உள்ளூர் மக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நெரிசல் ஏற்படக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதிமுகவினர் தவெகவில் இணைவது மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி குதிரை பேரத்தில் ஈடுபடுவது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த பெ.சண்முகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களை விலை பேசுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டார். மேலும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆளுங்கட்சியான தவெகவில் இணைகிறார்கள் என்பதற்காக, அவர்கள் மீதான வழக்குகளை முறையாக நடத்தாமல் காப்பாற்ற முயன்றால் அது மிகத் தவறானது என்றும், அதுபோன்ற செயல்களில் தவெக ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.