முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ-வுமான சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தன்னைத் தாக்க எதிர்க்கட்சியினர் முயன்றதாகவும், அந்தச் சம்பவத்தில் தனது சகோதரரும் மைத்துனரும் உயிரிழந்ததாகவும் கூறி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்தத் தாக்குதலுக்குப் பின் வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு, கடந்த 2021-ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது தனக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் வருவதால், பாதுகாப்பு கோரி சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே இந்த மிரட்டல் புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வாய்ப்பில்லை என்று கூறி, அந்த கோரிக்கையை நிராகரித்தார்.
இருப்பினும், தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதன் மூலம் பாதுகாப்புக்கான அவசியத்தை சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். எனவே, அவரது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அதிரடியாக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


AthibAn Tv