முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் தள்ளுபடியாகி அதிரடி கைது
தமிழக முதல்வர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசிய குற்றச்சாட்டில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீஸார் இன்று கைது செய்தனர். கடந்த ஜூன் 20-ம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சுக்கு எதிராக, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் முதல்முறையாக ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் இது அவதூறு வழக்கே தவிர போலீஸார் வழக்குப் பதிவு செய்ய முடியாது என வாதிடப்பட்டது. ஆனால், காவல் துறை தரப்பில், 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர் கட்டுப்பாட்டுடன் பேசியிருக்க வேண்டும் என்றும், வழக்குப் பதிவு செய்யாவிட்டால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறி முன் ஜாமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழகத்தை 1967-க்குப் பின் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான் ஆட்சி செய்துள்ளனர் என்றும், அவர்களை நாம்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தோம் என்றும் குறிப்பிட்டார். மேலும், மனுதாரர் சாதாரண குடிமகன் அல்ல, ஒரு எம்எல்ஏவாக இருக்கும் அவர் முதல்வர் பதவிக்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இன்று திருச்செந்தூர் அடுத்த ஆத்தூர் அருகே ஆய்வுக்குச் சென்றிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.


AthibAn Tv