Type Here to Get Search Results !

“ஆளுநருக்குத் திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை”: அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்


“ஆளுநருக்குத் திட்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை”: அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம்

மதுரைக்கு வந்த தமிழக ஆளுநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரைத் தன்னிச்சையாக அழைத்து அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரையில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் (திசா) பங்கேற்ற தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்கள் பிரதிநிதிகளும் மட்டுமே திட்டங்களை ஆய்வு செய்ய முடியும் என்று குறிப்பிட்ட அவர், எந்த அதிகாரமும் இல்லாத ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவெக அரசு என்றைக்கும் அனுமதிக்காது என்றும், அரசின் அனுமதியின்றி அதிகாரிகள் ஆளுநருக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.

இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், மத்திய அரசின் 39 அமைச்சகங்களின் கீழ் வரும் 96 திட்டங்களை ஆய்வு செய்யும் சட்டப்பூர்வ உரிமை அரசியல் சாசனப்படி தங்களுக்கு (எம்.பி-க்களுக்கு) மட்டுமே உள்ளதாகத் தெளிவுபடுத்தினார். ஆளுநரின் சந்திப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் அது 'மரியாதை நிமித்தமானது' என விளக்கம் அளித்திருந்தாலும், மக்கள் பிரதிநிதிகளின் இந்த உரிமையை வேறு யார் பறிக்க நினைத்தாலும் அதை அனுமதிக்க முடியாது என்றார். மேலும், யாராவது விதிகளை மீறி ஆளுநரின் தன்னிச்சையான ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்றால், அடுத்த 'திசா' கூட்டத்தில் அவர்களுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.