Type Here to Get Search Results !

ஆர்மீனியன், தம்புச்செட்டி தெருக்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


ஆர்மீனியன், தம்புச்செட்டி தெருக்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஆர்மீனியன் தெரு மற்றும் தம்புச்செட்டி தெருக்களில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து காவல்துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இப் பகுதிகளில் முறையான திட்டமிடல் இல்லாததால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவல நிலை நீடிப்பதாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "உயர் நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தம்புச்செட்டி தெரு மற்றும் ஆர்மீனியன் தெருக்களில் ஏராளமான வழக்கறிஞர்களின் அலுவலகங்களும், வங்கிகளும் இயங்கி வருகின்றன. மேலும், ஆர்மீனியன் தெருவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், அங்குள்ள பள்ளிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர். இதனால், காலை முதல் மாலை வரை இப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அராஜகமாக நிறுத்தி வைக்கப்படுவதால், பொதுமக்கள் நடந்து செல்லக் கூட வழியின்றி அவதிப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பவித்ரா, பீக்-அவர்ஸ் (Peak Hours) எனப்படும் அலுவலக வேலை நேரங்களில் இப்பகுதிகளில் நெரிசல் உச்சக்கட்டத்தை எட்டுவதாகவும், இதனால் அவசரத் தேவைகளுக்குக் கூட வழக்கறிஞர்களும் பொதுமக்களும் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், "இதே பாரிமுனைப் பகுதி போக்குவரத்து நெரிசல் தொடர்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2024-ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் கூட்டாக ஆய்வு செய்து உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய மனுவின் மூலம், நீதிமன்றம் பிறப்பித்த அந்த உத்தரவை அதிகாரிகள் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, இந்த விவகாரத்தில் காவல்துறையும், மாநகராட்சியும் உடனடியாக இணைந்து செயல்பட்டு, இப்பகுதிகளில் எங்குமே போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சுமுகமான சூழலை உருவாக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" எனத் தங்களது உத்தரவில் கறாராகத் தெரிவித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.