கட்டாயப் பணி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிட்டு அரசு சாரா மருத்துவர்கள் அதிரடி போராட்டம்!
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை (Postgraduate Medical Courses) முடித்த அரசு சாரா மருத்துவர்கள், கட்டாயப் பணி ஒப்பந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தை (DME) நேற்று அதிரடியாக முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஒப்பந்தத்தில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போதைய நடைமுறையின்படி, அரசுப் பணியில் இல்லாத வெளி மருத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளை முடித்த பிறகு, இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறினால், அவர்கள் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பிணைத்தொகையாக (Bond Amount) அரசுக்குச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் சூழலில்தான், இந்த விதிகளில் அதிகாரிகள் தங்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவதாகக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், "எங்களுடன் படித்து முடித்த பலரை இந்த இரண்டு ஆண்டு கட்டாயப் பணி ஒப்பந்தத்தில் இருந்து அதிகாரிகள் திடீரென விடுவித்துள்ளனர். அதேபோல், போதிய காலிப் பணியிடங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி, எங்களுக்கு அடுத்த பேட்ச் ஜூனியர் மருத்துவர்களையும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்து விட்டனர். ஆனால், எங்களை மட்டும் ஏன் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, ஒரு வாரத்தில் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளனர். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் பெரிய அளவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்துள்ளனர்.


AthibAn Tv