ஃபிஃபா உலகக் கோப்பை 2026: 2 கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மாபெரும் எழுச்சி! செனகலை வீழ்த்தி பெல்ஜியம் த்ரில் வெற்றி!
சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான நாக் அவுட் சுற்றில், பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் செனகல் அணியின் நட்சத்திர வீரர் சடியோ மானே கொடுத்த அற்புதமான கிராஸை, ஹபீப் தியாரா மின்னல் வேகத்தில் கோலாக மாற்ற செனகல் 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியின் 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் தடுப்பாட்டத் தவற்றை சாதகமாக்கிக் கொண்ட இஸ்மைலா சர், பந்தை நெஞ்சால் கட்டுப்படுத்தி அபாரமாக ஒரு கோல் அடித்தார். இதனால் செனகல் அணி 2-0 என்ற வலுவான முன்னிலையுடன் ஆட்டத்தை தன் வசம் வைத்திருந்தது.
போட்டி முடிய இன்னும் 4 நிமிடங்களே இருந்த நிலையில், பெல்ஜியம் அணி யாரும் எதிர்பாராத மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் மெயூனியர் கொடுத்த பந்தை நட்சத்திர வீரர் ரோமலு லுகாகு லாவகமாக கோல் வலைக்குள் தள்ளினார். அதனைத் தொடர்ந்து 89-வது நிமிடத்தில் லியாண்ட்ரோ டிரொஸார்ட் தூக்கி அடித்த கிராஸை, யூரி திலெமன்ஸ் துள்ளியவாறு தலையால் முட்டி அசாத்தியமான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியதால் செனகல் அதிர்ச்சியில் உறைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் மற்றும் கூடுதல் காய நேரத்திலும் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் (Extra Time) வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தின் 119-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் யூரி திலெமன்ஸ், செனகல் வீரர் லமின் கமாராவால் ஃபவுல் செய்யப்பட்டார். சுமார் 6 நிமிடங்கள் நீடித்த விஏஆர் (VAR) சோதனைக்குப் பிறகு பெல்ஜியத்திற்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தி 120+5-வது நிமிடத்தில் யூரி திலெமன்ஸ் எளிதாக கோல் அடிக்க, பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்று 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்கு முன்னேறியது. இந்த சர்ச்சை கோலால் செனகல் பரிதாபமாகத் தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியில் செனகல் 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அவர்கள் கோல் அடிக்க முயன்ற 3 அற்புதாமான வாய்ப்புகளை பெல்ஜியத்தின் கோல்கீப்பர் திபோ கோர்டுவா தடுத்து நிறுத்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார்.
உலகக் கோப்பை வரலாற்றின் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 2 கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2018 உலகக் கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஜப்பானுக்கு எதிராக 0-2 எனப் பின்தங்கியிருந்த பெல்ஜியம், பின்னர் 3-2 என்ற கணக்கில் இதேபோன்றதொரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


AthibAn Tv