வரலாற்றில் முதல் முறை: அடுத்த வாரம் நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
வெல்லிங்டன் / புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்குத் தனது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் (கடந்த ஏப்ரல் மாதம்) கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா மிகவும் முக்கியமான நாடாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவிருக்கிறோம். இது நியூசிலாந்தில் கூடுதல் வேலைவாய்ப்புகள், அதிக ஏற்றுமதி மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியைத் தரும். குறிப்பாக, 140 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்தியச் சந்தையில், நமது பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்கான புதிய வாய்ப்புகள் இதன் மூலம் திறக்கப்படும். இது நியூசிலாந்து சமூகத்திற்கு அதிக வருவாயைக் கொண்டு வருவதுடன், புதிய வேலைகளை உருவாக்கி, ஊதியத்தையும் உயர்த்தும்" என லக்சன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக விளங்கும் இந்தியாவுடன், பொருளாதார ரீதியிலான உறவை வலுப்படுத்த நியூசிலாந்து அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முதல் நியூசிலாந்து பயணம், இரு நாட்டு உறவுகளிலும் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் இந்த உச்சிமாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என இரு நாட்டு ராஜதந்திரிகளும் கருதுகின்றனர்.

AthibAn Tv