சென்னையில் 8 வயது சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு டிஜிபி பாராட்டு!

Dina AthibAn
0


சென்னையில் 8 வயது சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு: சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு டிஜிபி பாராட்டு!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, நள்ளிரவில் பெற்றோர் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்த முயன்ற நபரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரின் சமயோசித புத்தியால் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டு, சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். சாமர்த்தியமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநரைத் தமிழக டிஜிபி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷனிஜல் தாஸ் (56) என்பவர், தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் கடந்த 1-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரயில் புறப்பட நேரம் இருந்ததால், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே உள்ள நடைபாதையில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2-ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவன், தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் திடீரெனத் தன் தோளில் தூக்கிக்கொண்டு தப்பியோட முயன்றான்.

அந்த வழியாகச் சென்ற பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் (45), இதைப் பார்த்துச் சந்தேகமடைந்து உடனடியாக யானைக்கவுனி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சிறுமியைக் கடத்த முயன்ற நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த பெயிண்டர் சசிகுமார் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்ததுடன், மீட்கப்பட்ட சிறுமியைப் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

பொதுநல அக்கறையுடன் செயல்பட்டு கடத்தலை முறியடித்த ஆட்டோ ஓட்டுநர் முருகனை, டிஜிபி நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய டிஜிபி, "ஆட்டோ ஓட்டுநர் முருகனின் துரிதமான நடவடிக்கை மற்றும் பொதுநல அக்கறை ஒரு சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. பொதுமக்களின் விழிப்புணர்வும், காவல் துறையுடனான ஒத்துழைப்பும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக் காட்டும் சிறந்த முன்னுதாரணம் இவரது செயலாகும்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!