பெங்களூருவில் 'டிஜிட்டல் கைது' மோசடி: முதியவரை மிரட்டி ரூ.3.17 கோடி சுருட்டிய கும்பல்!

Dina AthibAn
0

பெங்களூருவில் 'டிஜிட்டல் கைது' மோசடி: முதியவரை மிரட்டி ரூ.3.17 கோடி சுருட்டிய கும்பல்!

பெங்களூரு: மர்ம கும்பல் ஒன்று தங்களை அரசு உயர் அதிகாரிகள் போலக் காட்டி பொதுமக்களை ஏமாற்றும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) மோசடி அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்த மஞ்சுநாத் (74) என்ற முதியவரை மிரட்டி, அவரிடமிருந்து சுமார் 3.17 கோடி ரூபாயை மோசடி கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த மார்ச் 9-ஆம் தேதி மஞ்சுநாத்தின் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்ட ரஞ்சிதா என்ற பெண், தன்னை ஒரு மூத்த தொலைத்தொடர்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது அவர், "உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் அடையாள ஆவணங்கள் ஹவாலா பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உங்கள் மீதும், உங்கள் மனைவி மீதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெங்களூரு துணை ஆணையர் (DCP) எனக் கூறி அசோக் என்ற நபர் பேசியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேர், அடுத்தடுத்து போலீஸ் அதிகாரிகள் போல மஞ்சுநாத்தைத் தொடர்பு கொண்டு சிறையில் அடைத்துவிடுவோம் எனத் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். இந்த மிரட்டல்களால் பயந்துபோன மஞ்சுநாத், தனது வங்கிக் கணக்கிலிருந்து 22 தவணைகளாக மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை, அந்த கும்பல் குறிப்பிட்ட 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.

பணம் முழுவதையும் அனுப்பிய பிறகு, அந்த மர்ம நபர்களிடமிருந்து எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வராததால் சந்தேகம் அடைந்த மஞ்சுநாத், நேற்று பெங்களூரு மாநகர தெற்கு மண்டல காவல் ஆணையரை நேரில் சந்தித்துப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல் துறையினர், மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!