வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்யா நீதிமன்றத்தில் ஆஜர்!

Dina AthibAn
0

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்யா நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை தி.நகர் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) சத்யா என்கிற சத்யநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்த சத்யநாராயணன், தனது பதவிக் காலத்தில் வருமான ஆதாரங்களுக்குப் புறம்பாக சுமார் 9.41 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சத்யநாராயணன் மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 2023-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஆர். சண்முகசுந்தரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ சத்யநாராயணனும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

விசாரணையின் போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 130 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, 132 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அதேநேரம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் தங்கள் மீது தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்" என்று கோரி விடுதலை மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!