ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலுடன் மோதல்!

Dina AthibAn
0

ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி: ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகலுடன் மோதல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான நாக் அவுட் சுற்று ஆட்டம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற சோபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உலகக் கோப்பை வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்துள்ள ஸ்பெயின் அணியும், ஆஸ்திரிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஸ்பெயின் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றுக்குக் கெத்தாக முன்னேறியது. வரும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த சுற்றில் ஸ்பெயின் அணி, பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் குகுரெல்லா பாக்ஸ் பகுதிக்குள் துல்லியமாக பாஸ் செய்த பந்தை, மிகைல் ஒயார்சபல் எளிதாகக் கோலாக மாற்றி அணிக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். தொடர்ந்து 66-வது நிமிடத்தில் அலெக்ஸ் பயேனா கொடுத்த கிராஸை பெட்ரோ போரோ தலையால் முட்டி கோல் அடிக்க, ஸ்பெயின் 2-0 என வலுவான நிலைக்குச் சென்றது. ஆட்டத்தின் இறுதிப்பகுதியான 89-வது நிமிடத்தில், மீண்டும் குகுரெல்லா - ஒயார்சபல் கூட்டணி இணைந்து அசத்தியது. குகுரெல்லா கடத்திக் கொடுத்த பந்தை ஒயார்சபல் மீண்டும் கோலாக மாற்ற, ஸ்பெயின் 3-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

35 போட்டிகளில் தோல்வியே இல்லை! ஸ்பெயின் அணி கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 35 போட்டிகளில் தோல்வியடையாமல் புதிய சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் 2023 நேஷன்ஸ் லீக் மற்றும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டங்களை அந்த அணி வென்றுள்ளது. மேலும், நேற்று பெற்ற வெற்றியின் மூலம், கடந்த 2010-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதற்குப் பிறகு, உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டி ஒன்றில் ஸ்பெயின் அணி வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

519 நிமிடங்கள்... இத்தாலி கோல்கீப்பரின் சாதனையை முறியடித்த உனாய் சிமோன்! நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் எதிரணிக்கு ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் விளையாடி வருகிறது. இதற்கு அந்த அணியின் 36 வயது அனுபவ கோல்கீப்பர் உனாய் சிமோனின் அசாத்திய திறமையே முக்கியக் காரணமாகும். கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களையும் சேர்த்து மொத்தம் 519 நிமிடங்கள் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுத்து உனாய் சிமோன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 1990-ல் இத்தாலியின் கோல்கீப்பர் வால்டர் ஜெங்கா 517 நிமிடங்கள் கோல் அடிக்காமல் தடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!