அயோத்தி ராமர் கோயிலில் விஐபி தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை வசூல்: சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை!

Dina AthibAn
0

அயோத்தி ராமர் கோயிலில் விஐபி தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை வசூல்: சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை!

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக, தூர ஊர்களில் இருந்து வரும் விஐபிக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் ஒரே நாளில் தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பவும், ராமர் சிலைக்கு அருகில் சென்று வழிபடவும் விரும்புகின்றனர். இந்தச் சூழலைச் சாதகமாக்கிக் கொண்ட சில உள்ளூர் ஹோட்டல் நிர்வாகங்கள், ராமர் கோயில் ஊழியர்கள் சிலரின் உதவியுடன் விஐபி அனுமதிச் சீட்டுகளை முறைகேடாகப் பெற்று, அதற்குப் பதிலாகப் பக்தர்களிடம் ரூ.30,000 வரை கட்டணமாக வசூலித்து அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த மோசடி கும்பல் விஐபி அனுமதிச் சீட்டுகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு, இதன் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்மையில் ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளியான ராம் சங்கர் யாதவ் (என்ற) டின்னு யாதவிற்கும் இந்த விஐபி டிக்கெட் மோசடிக்கும் நேரடித் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஐபி அனுமதிச் சீட்டு வழங்கும் விவகாரத்தில் என்னென்ன விதிமீறல்கள் நடந்துள்ளன என்பது குறித்தும், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் புகைப்படம் எடுக்கக் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் (RSS) பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கவலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "காணிக்கை திருட்டு மற்றும் மோசடி சம்பவங்கள் லட்சக்கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கையைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ராமர் கோயில் என்பது ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் மரியாதை, நம்பிக்கை மற்றும் பக்தியின் மையமாகத் திகழ்கிறது. இதன் பின்னணியில் பல தலைமுறைகளின் தியாகம் அடங்கியுள்ளது. எனவே, நிதி நடைமுறைகள் முற்றிலும் வெளிப்படையாகவும், ஆன்மிகப் புனிதத்தன்மை காக்கப்படும் வகையிலும் கோயில் நிர்வாகம் அமைய வேண்டும். அப்போதுதான் ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்து சமூகத்தின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!