குறுக்கு வழியில் பெரும்பான்மை பெற தவெக அரசு நாடகம்; எம்.எல்.ஏ-க்களிடம் மறைமுக பேரம்: வானதி சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டு!

Dina AthibAn
0

குறுக்கு வழியில் பெரும்பான்மை பெற தவெக அரசு நாடகம்; எம்.எல்.ஏ-க்களிடம் மறைமுக பேரம்: வானதி சீனிவாசன் அதிரடி குற்றச்சாட்டு!

சென்னை / அம்பத்தூர்: தமிழகத்தில் தவெக அரசுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லாத சூழலில், பிற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை மறைமுகப் பேரம் மற்றும் அதிகார அழுத்தங்கள் மூலம் ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அம்பத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த அதிரடி புகார்களை முன்வைத்தார்.

தூய்மையான ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் தவெக அரசு, தங்களுக்குத் தேவையான பெரும்பான்மையை எப்படியாவது நிரூபிப்பதற்காகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருவதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு கூட்டணியுடன் ஆட்சி நடத்தினாலும், குறுக்கு வழியில் தனிப் பெரும்பான்மை பெறுவதற்காகப் பணம் மற்றும் அதிகார பேரங்களில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாகச் சாடினார். தவெக அரசின் இத்தகைய செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பிற்கும், ஜனநாயகத்திற்கும் உரிய மரியாதை அளிக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத் தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல் ஆளுங்கட்சியின் அலுவலகமாக மாற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அமைச்சரின் தந்தை அரசு விவகாரங்களில் ஆய்வு செய்வதும், கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைப்பதும், மாநகராட்சிக் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் தலையிடுவதும் தொடர்கதை ஆகியுள்ளது என்று சாடினார். எனவே, அரசு விவகாரங்களில் தகுதியற்ற நபர்கள் தலையிடுவதை முதலமைச்சர் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் படுகொலைகளும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், புதிய அரசின் 2 மாத ஆட்சியில் ஆட்சியாளர்களின் முகம் மாறியுள்ளதே தவிர, பெண்கள் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார். காவல்துறையில் சீருடை மாற்றத்தைத் தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் நடக்கவில்லை என்றும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயமில்லை என்பது தினசரி வெளியாகும் குற்றச் செய்திகள் மூலம் தெளிவாகிறது என்றும் சாடினார். மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனுமதியின்றி எதையும் செய்யக்கூடாது என்று மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளதால், கூட்டணியில் உள்ள அண்டை மாநில முதலமைச்சருடன் பேசி தமிழகத்தின் நீதியையும் உரிமையையும் நிலைநாட்ட வேண்டியது தமிழக முதலமைச்சரின் பொறுப்பு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!