ஆம்ஸ்ட்ராங் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் திரண்டு அஞ்சலி – குற்றவாளிகளைத் தண்டிக்க 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Dina AthibAn
0

ஆம்ஸ்ட்ராங் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் திரண்டு அஞ்சலி – குற்றவாளிகளைத் தண்டிக்க 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை / பொத்தூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் நேரில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. இதில் அவரது மனைவியும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளருமான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின், இந்த வழக்கில் உரிய நீதி கோரி 7 முக்கியத் தீர்மானங்களை முறைப்படி நிறைவேற்றினார்.

அவற்றுள், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் பதிவு செய்ய வேண்டும், அரசு தரப்பு மூத்த வழக்கறிஞராக பா.ப.மோகனை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் மற்றும் இந்த வழக்கின் பின்னணியை முழுமையாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் தீர்மானங்களாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கொலையின் உண்மையான குற்றவாளிகள் மற்றும் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என இத்தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மாதவரம் எம்.எல்.ஏ விஜய் பிரபு, காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரையுலகினரும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகப் பங்கேற்று ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்தில் தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!