புழல் மத்திய சிறையில் பயங்கரம்: பிரபல ரவுடியைக் கொல்ல ரூ.1 கோடி பேரம் – கொலைச் சதி முறியடிப்பு, 4 கைதிகள் அதிரடி மாற்றம்!

Dina AthibAn
0


புழல் மத்திய சிறையில் பயங்கரம்: பிரபல ரவுடியைக் கொல்ல ரூ.1 கோடி பேரம் – கொலைச் சதி முறியடிப்பு, 4 கைதிகள் அதிரடி மாற்றம்!

சென்னை / புழல்: சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட ஒரு கோடிரூபாய் சதித்திட்டத்தைச் சிறைத்துறை உளவுப்பிரிவினர் சமயோசிதமாக முறியடித்துள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்த 4 கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வெவ்வேறு மத்திய சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

புழல் மத்திய சிறையில் தண்டனை கைதியாகப் பிரபல ரவுடி வெள்ளைக்காளி அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதே சிறையில் தஞ்சாவூரைச் சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான லாலி மணிகண்டனும் தண்டனை கைதியாக இருந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், சிறைக்குள்ளேயே வெள்ளைக்காளியைத் தீர்த்துக்கட்ட லாலி மணிகண்டனுடன் ரூ.1 கோடிக்கு மறைமுகப் பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இதில் முன்பணமாக ரூ.25 லட்சம் கைமாறியதை அடுத்து, சிறையில் உள்ள மேலும் 3 தண்டனை கைதிகளுடன் இணைந்து லாலி மணிகண்டன் இந்த பயங்கர கொலைச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று சிறைக்குள் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் மதிய நேரத்தைப் பயன்படுத்தி, வெள்ளைக்காளியைத் தாக்கிக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பாகச் சிறைத்துறை புலனாய்வு பிரிவினருக்கு (Prison Intelligence) நேற்று மாலை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிரடி சோதனையில் இறங்கிய சிறைக்காவலர்கள், சந்தேகத்திற்குரிய லாலி மணிகண்டன் உட்பட 4 கைதிகளையும் தனித்தனியாகப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணையில் வெள்ளைக்காளியைக் கொலை செய்யத் திட்டமிட்டது முற்றிலும் உறுதியானது. சிறைத்துறையினரின் இந்த அதிவேக நடவடிக்கையால் சிறைக்குள் அரங்கேறவிருந்த பெரும் அசம்பாவிதம் மற்றும் கொலைச் சதி முறியடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் கருதி, முதன்மைக் குற்றவாளியான ரவுடி லாலி மணிகண்டன் உடனடியாகச் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும், இக்கொலை சதித்திட்டத்தில் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட மற்ற 3 தண்டனை கைதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறை பாதுகாப்பு குறித்தும் தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!