விசிக சார்பில் மு.வீரபாண்டியன் உள்பட 7 ஆளுமைகளுக்கு விருதுகள்: பொற்கிழியுடன் வழங்கிச் சிறப்பித்தார் திருமாவளவன்!
சென்னை / தேனாம்பேட்டை: சமூகம், அரசியல் மற்றும் கலை-இலக்கியம் ஆகிய துறைகளில் அரும்பணியாற்றி வரும் முக்கிய ஆளுமைகளை ஊக்கப்படுத்தும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் 'விசிக விருதுகள்' வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு வரும் பட்டியலினம் அல்லாத சான்றோர்களை அடையாளம் கண்டு விசிக இந்த விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவிற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்ட 7 முக்கிய ஆளுமைகளுக்கும் தகுதியுரை வாசித்து, விருதுகளுடன் தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழியையும் வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த விழாவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.சொக்கலிங்கத்திற்கு 'அம்பேத்கர் சுடர்' விருதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்கு 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்கப்பட்டன. மேலும், மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி டிபேனுக்கு 'பெரியார் ஒளி', சாமித்தோப்பு அடிகளார் பால.பிரஜாபதிக்கு 'காமராசர் கதிர்', சமூக செயல்பாட்டாளர் ரூத்மனோரமாவிற்கு 'அயோத்திதாசர் ஆதவன்', ஐஎன்டிஜே மாநில துணைத் தலைவர் முகமது முனீருக்கு 'காயிதே மில்லத் பிறை' மற்றும் நாமக்கல் தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கு 'செம்மொழி ஞாயிறு' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இந்த விழாவில் விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் எம்.பி, பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
விருதைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சமூகம் மாற வேண்டும் என்று களமாடுகிற ஒரு பேரியக்கத்தின் சார்பில் கிடைத்துள்ள இந்த விருது மிகுந்த மரியாதைக்குரியது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், "தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆதரவு கோரிய நிலையில், ஆளுநர் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதை ஆராய்ந்துதான் நாங்கள் தவெக-வுக்கு ஆதரவு அளித்தோம்; எங்களை யாரும் நிர்பந்திக்கவில்லை. சிலர் சொல்வது போல் சோபா, கல்லாப்பெட்டி போன்ற நிபந்தனைகள் எல்லாம் எங்களுக்கு இல்லை. விடுதலைக்காகப் போராடுகிறவர்கள் அருகில் இவை ஒருபோதும் வராது. எங்களுக்கு பாஜகதான் பகையே தவிர, மற்ற ஜனநாயக சக்திகள் பகையல்ல" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக வரவேற்புரையாற்றிய சமூக நீதித்துறை அமைச்சரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு, "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற திருமாவளவனின் முழக்கம் இன்றுவரை அடித்தட்டு மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறது. 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்று அவர் வைத்த முழக்கம் இன்று எட்டப்பட்டிருக்கிறது. விசிகவை சிதைக்க வேண்டும், கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பரப்பப்பட்ட அவதூறுகளை எல்லாம் முறியடித்து, தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விசிக நிற்கிறது. விசிகவை விடுத்து தமிழகத்தில் எந்த அரசியலும் நடக்காது" என்று ஆவேசமாக உரையாற்றினார். இவ்விழாவில் விசிக செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன், அமைப்புச் செயலாளர் லயன் ஆர்.பன்னீர்தாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

AthibAn Tv