Type Here to Get Search Results !

தவெக ஆட்சியின் கடிவாளம் திமுக, அதிமுக வசம்: டிடிவி தினகரன் அதிரடி கருத்து!


தவெக ஆட்சியின் கடிவாளம் திமுக, அதிமுக வசம்: டிடிவி தினகரன் அதிரடி கருத்து!

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை அடையாறில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நடந்து முடிந்த தேர்தலில் தவெகவுக்கு 108 இடங்களில் மட்டும்தான் மக்கள் வெற்றியைத் கொடுத்தார்கள். ஆனால், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு மக்கள் மொத்தம் 126 எம்.எல்.ஏ.க்களை வழங்கியுள்ளனர். இந்த 126 பேரும் தவெகவுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பதை தவெக தலைவர் விஜய்யும், அவரைச் சுற்றி இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது. மக்கள் இந்த ஆட்சியின் கடிவாளத்தை திமுக மற்றும் அதிமுகவிடம் தான் கொடுத்துள்ளனர்" என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், கூட்டணி மற்றும் தேர்தல் செலவுகள் குறித்துப் பேசிய டிடிவி தினகரன், நடந்து முடிந்த தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக வைகோ தெரிவித்துள்ளதைச் சாடினார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சியில் தீப்பெட்டிச் சின்னத்தில் வைகோவின் மகன் துரை வைகோ நின்றபோது, இதே திமுக செலவு செய்துதான் அவர் வெற்றி பெற்றார் என்பதை வைகோ உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் வேண்டுமானால் தவெக அரசுடன் இருக்கலாம் என்றும், ஆனால் மற்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயம் விஜய்க்கும், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, அமமுகவின் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாகக் கட்சி எம்.எல்.ஏ.விடம் கடிதம் பெற்று ஆளுநரிடம் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், தேவைப்படும்போது அந்த வழக்கை அமமுக கையில் எடுக்கும் என்றும், அதில் முதல் குற்றவாளியாக தவெக தலைவர் விஜய் சேர்க்கப்படுவார் என்றும் எச்சரித்தார். டிடிவி தினகரனின் இந்த காரசாரமான பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.